புதன், 17 செப்டம்பர், 2014

அப்புச்சி வழி ( நினைவோடைக் குறிப்புகள்) வா.மு.கோமு

     
       நடுகல் பதிப்பக  வெளியீட்டின்  4 -வது புத்தகமான ஆல்ரவுண்டர் அண்ணன் வா.மு.கோமு. அவர்களின்  'அப்புச்சி வழி'  ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

       எனக்கான நினைவுகள் பல நான் ஏற்கனவே சிறுகதை வடிவத்திலும்,நாவல் வடிவத்தினுள்ளும் எழுதிவிட்டேன்.இருந்தும் சிலவற்றை இப்படி குறிப்பென்று தனித்து எழுத வசதியாய்த்தான் இருக்கிறது! இப்படியும் ஒரு புத்தகம் இருக்கட்டும்! என்று முன்னுரையிலேயே கூறிவிட்டு, இந்த புத்தகத்தை படிக்கும் நம்மை பழைய நினைவுகளுக்கு நகர்த்திச் சென்றுவிடுவதில் இந்த புத்தகத்தின் நோக்கம் அவர் பார்வையில் வெற்றியடைகிறது.
...................................................................................................................................................................

இனி புத்தகம் பற்றி.....


           ஒரு காலத்தில் ரேபிஸ் எனும் வெறிநாய்க் கடிக்கு மருந்து குன்னூரில்தான் கிடைக்கும். கடிபட்டவர்கள் அங்குதான் சென்று தொப்புளைச் சுற்றி ஊசிபோட்டுக் கொள்ளவேண்டும்.காலம் செல்லச் செல்ல அந்த மருந்து கோவை அரசு மருத்துவமனையிலேயே கிடைக்கப் பெற்றது.என் பெரிய மாமா வீட்டில் அவருக்கும் அத்தைக்கும் என்றும் ஏழரைதான் என்றாலும்,இருவருக்கும் நாய்கள் என்றால் பிரியம்.சிறு வயதில் மாமா பையன் அடிக்கடி அவர்கள் வீட்டில் வளர்க்கும் நாயுடன் விளையாடி கடி  வாங்கி விடுவான்,அவனுக்கு ஊசிபோட அரசு மருத்துவமனைக்கு நானும் செல்வேன்.அங்கு அதிகாலையிலேயே ஊசிபோட பெரிய வரிசை காத்திருக்கும்,இதில் சில இளவயது பெண்களும் ஊசிபோட்டுக்கொள்ள வசதியாக உடைகளை தளர்த்திக்கொண்டு நிற்பதைக் காணலாம். முதல் பகுதியில்  என்னை இந்நினைவுகளுக்கு இழுத்துச் சென்றுவிட்டார்.

             வெட்டி வியாக்யானம் காட்டும் ஒரு சிலரின் உதாரணமாய்  சின்னச்சாமியண்ணனை 'இரும்பும் கரும்பாச்சு இட்டேரியும் பாழாச்சு'  பகுதியில் காட்டியுள்ளார்.

             நம் வாழ்க்கையில் நடந்து முடிந்த சில சுவாரசிய  சம்பவங்கள் எப்பொழுது நினைத்தாலும்,நம்மை அறியாமல் இருக்கும் இடமறியாது 'களுக்' என்ற சிறுசிரிப்பை உதிர்க்கச் செய்யும்.அதை சம்பவங்களும் விசித்திரங்களும் பகுதியில் பதிந்திருக்கிறார்.

               ஊருக்குள் வெறும் வாயில் கயிறு திரிக்கும் ஆட்களை அட்டக்கத்தி என்பர்.இவர்களில் ஒருவரான அட்டக்கத்தி அரவிந்தசாமியை அவருடனான சம்பவங்களில் நம்மை உள்ளுக்குள் இழுத்து அவரின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

                சாமியார்களின் பராக்கிரமங்களால் ஈர்க்கப்பட்டு அவர்களின்  சரச சல்லாபங்களுக்கு உடன்பட்டுப் போகும் பெண்களை, ஏமாந்தவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்! என்கிறார் அவிங்க ரொம்ப நல்லவிய்ங்க பகுதியில்.

               வாஸ்து மாணிக்கத்தை எழுத்தாளரின்  முகநூல் பதிவில் பல முறை படித்துவிட்டேன்.இந்த முறை படித்தபோதும் மகேஸ்வரி இறுதியில் திருந்தியதை நல்ல முடிவாக மனசு ஏற்றுக்கொள்கிறது.



                அப்புச்சி வழியை என்னால் அவ்வளவு எளிதில் மறக்க முடியவில்லை.ஒவ்வொருவருக்கும் அவரது அப்புச்சியுடனான மறக்கமுடியாத சம்பவங்கள் இருந்திருக்கும். இந்தப் பகுதியில் எழுத்தாளரின் அனுபவத்தை படிக்கும்பொழுது, பல சம்பவங்கள் என்னுள்ளும் நிழலாடின.நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்  காலத்தில் எங்கள் பகுதியில்  டெக் கேசட்டில் நீலப்படம் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தார் பெரியவரொருவர்.என் அப்புச்சிக்கு அதைப் போட்டுக் காட்டவில்லை எனினும் அவர் தியேட்டருக்குச் சென்றுவிடுவார்.பலமுறை படம் போட்டு சில நிமிடங்கழித்து சகாக்களுடன் உள்ளே செல்லும் நான், இடைவேளையில்தான்  என் முன் சீட்டில் அமர்ந்திருந்தவர் என் அப்புச்சி என்றறிவேன்.பிட்டு ஓட்டி முடித்ததும் கிளம்பிவிடும் நாங்கள்,படம் முடிந்து இறுதியாக வரும் அப்புச்சியிடம் கடைசிவரை சிக்கியதே இல்லை.எழுத்தாளர் கோவை இருதயா தியேட்டர்,முருகன் தியேட்டர்,காந்திபுரம் அருள் தியேட்டர் இவற்றில் ஆடிக்கொருமுறை ஆணும்பெண்ணும் உருளும் படத்தை காட்டுவார்கள் என்றிருந்தார்.என்னுடைய காலத்தில் இருதயா தியேட்டர் மட்டும் இருந்த போதிலும். சிங்காநல்லூரில் அம்பாள்,மற்றும் பீளமேடு மணீஸ் தியேட்டர்கள்  தான் எங்களுக்கு வாழ்க்கைக் கல்வி பயிற்றுவித்தன.பீளமேடு மணீஸ்ல் இரவு எட்டேமுக்கால் காட்சி மிக பிரபலம்.அம்பாள் தியேட்டரில்  காலைக் காட்சிக்கு ஒரு ரூபாய் டிக்கெட்டுக்கு மட்டும் கூட்டம் முண்டியடிக்கும்.ஒருமுறை என் மாமா பையன் பதினைந்து வயதாகியும் கூளையாக இருந்ததால் தியேட்டர் மேனேஜர் அவனை மட்டும் படம்பார்க்க அனுமதி மறுத்து பின்பு அடுத்தமுறை வரும்பொழுது டிசி ஜெராக்ஸ் காட்டிவிடுகிறோம் என்று சொல்லி அனுமதி பெற்றது,மற்றும் முண்டியடிக்கும் ஒரு ரூபாய்க் கவுண்டரில் யாரோ ஒருவரின் தள்ளலில் கீழே விழுந்து,எழுந்து அவிழ்ந்து போன  லுங்கியை முடிச்சுப்போட்டுக் கட்டிக்கொண்டு அவனுக்கும் சேர்த்து மூன்று டிக்கெட் எடுத்து வெற்றி வாகை சூடிய 'தும்தி'குமார் உட்பட பலரையும் நினைவுக்குக் கொண்டு வந்தது.

       திருமண அழிப்பிதழ் குறிப்பில் வரும் சின்னச்சாமி போல பல பெப்பலத்தான்கள் இப்பொழுதும் ஏதேனும் ஒரு டாஸ்மாக்கில் சரக்கடிக்கக் கையேந்திக்கொண்டுதான் இருக்கின்றனர்  வாழ்கை தந்த  வேறுவேறான அனுபவங்களால்.

        எழுதிக்கொண்டிருக்கும் கதையின் கதாபாத்திரமாகவே மாறிவிடும் ஒரு சில எழுத்தாளர்களைப் போலான ஏகாம்பரத்தை மல்லிகா என்றொரு ஆவியில் தனக்கே உரிய எள்ளலுடன் தட்டிலேப்பியிருக்கிறார்.

         எழுத்துபிழையாலும்,திரும்பத் திரும்ப வரும் சில பத்திகளாலும் முகச் சவரம் செய்யலியோ படிக்க முடியவில்லை.


நினைவோடைக் குறிப்புகள் என்றாலும் நினைவில் நிற்கிறது இந்த அப்புச்சி வழி.

           

             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக