புதன், 17 செப்டம்பர், 2014

அப்புச்சி வழி ( நினைவோடைக் குறிப்புகள்) வா.மு.கோமு

     
       நடுகல் பதிப்பக  வெளியீட்டின்  4 -வது புத்தகமான ஆல்ரவுண்டர் அண்ணன் வா.மு.கோமு. அவர்களின்  'அப்புச்சி வழி'  ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

       எனக்கான நினைவுகள் பல நான் ஏற்கனவே சிறுகதை வடிவத்திலும்,நாவல் வடிவத்தினுள்ளும் எழுதிவிட்டேன்.இருந்தும் சிலவற்றை இப்படி குறிப்பென்று தனித்து எழுத வசதியாய்த்தான் இருக்கிறது! இப்படியும் ஒரு புத்தகம் இருக்கட்டும்! என்று முன்னுரையிலேயே கூறிவிட்டு, இந்த புத்தகத்தை படிக்கும் நம்மை பழைய நினைவுகளுக்கு நகர்த்திச் சென்றுவிடுவதில் இந்த புத்தகத்தின் நோக்கம் அவர் பார்வையில் வெற்றியடைகிறது.
...................................................................................................................................................................

இனி புத்தகம் பற்றி.....


           ஒரு காலத்தில் ரேபிஸ் எனும் வெறிநாய்க் கடிக்கு மருந்து குன்னூரில்தான் கிடைக்கும். கடிபட்டவர்கள் அங்குதான் சென்று தொப்புளைச் சுற்றி ஊசிபோட்டுக் கொள்ளவேண்டும்.காலம் செல்லச் செல்ல அந்த மருந்து கோவை அரசு மருத்துவமனையிலேயே கிடைக்கப் பெற்றது.என் பெரிய மாமா வீட்டில் அவருக்கும் அத்தைக்கும் என்றும் ஏழரைதான் என்றாலும்,இருவருக்கும் நாய்கள் என்றால் பிரியம்.சிறு வயதில் மாமா பையன் அடிக்கடி அவர்கள் வீட்டில் வளர்க்கும் நாயுடன் விளையாடி கடி  வாங்கி விடுவான்,அவனுக்கு ஊசிபோட அரசு மருத்துவமனைக்கு நானும் செல்வேன்.அங்கு அதிகாலையிலேயே ஊசிபோட பெரிய வரிசை காத்திருக்கும்,இதில் சில இளவயது பெண்களும் ஊசிபோட்டுக்கொள்ள வசதியாக உடைகளை தளர்த்திக்கொண்டு நிற்பதைக் காணலாம். முதல் பகுதியில்  என்னை இந்நினைவுகளுக்கு இழுத்துச் சென்றுவிட்டார்.

             வெட்டி வியாக்யானம் காட்டும் ஒரு சிலரின் உதாரணமாய்  சின்னச்சாமியண்ணனை 'இரும்பும் கரும்பாச்சு இட்டேரியும் பாழாச்சு'  பகுதியில் காட்டியுள்ளார்.

             நம் வாழ்க்கையில் நடந்து முடிந்த சில சுவாரசிய  சம்பவங்கள் எப்பொழுது நினைத்தாலும்,நம்மை அறியாமல் இருக்கும் இடமறியாது 'களுக்' என்ற சிறுசிரிப்பை உதிர்க்கச் செய்யும்.அதை சம்பவங்களும் விசித்திரங்களும் பகுதியில் பதிந்திருக்கிறார்.

               ஊருக்குள் வெறும் வாயில் கயிறு திரிக்கும் ஆட்களை அட்டக்கத்தி என்பர்.இவர்களில் ஒருவரான அட்டக்கத்தி அரவிந்தசாமியை அவருடனான சம்பவங்களில் நம்மை உள்ளுக்குள் இழுத்து அவரின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

                சாமியார்களின் பராக்கிரமங்களால் ஈர்க்கப்பட்டு அவர்களின்  சரச சல்லாபங்களுக்கு உடன்பட்டுப் போகும் பெண்களை, ஏமாந்தவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்! என்கிறார் அவிங்க ரொம்ப நல்லவிய்ங்க பகுதியில்.

               வாஸ்து மாணிக்கத்தை எழுத்தாளரின்  முகநூல் பதிவில் பல முறை படித்துவிட்டேன்.இந்த முறை படித்தபோதும் மகேஸ்வரி இறுதியில் திருந்தியதை நல்ல முடிவாக மனசு ஏற்றுக்கொள்கிறது.



                அப்புச்சி வழியை என்னால் அவ்வளவு எளிதில் மறக்க முடியவில்லை.ஒவ்வொருவருக்கும் அவரது அப்புச்சியுடனான மறக்கமுடியாத சம்பவங்கள் இருந்திருக்கும். இந்தப் பகுதியில் எழுத்தாளரின் அனுபவத்தை படிக்கும்பொழுது, பல சம்பவங்கள் என்னுள்ளும் நிழலாடின.நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்  காலத்தில் எங்கள் பகுதியில்  டெக் கேசட்டில் நீலப்படம் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தார் பெரியவரொருவர்.என் அப்புச்சிக்கு அதைப் போட்டுக் காட்டவில்லை எனினும் அவர் தியேட்டருக்குச் சென்றுவிடுவார்.பலமுறை படம் போட்டு சில நிமிடங்கழித்து சகாக்களுடன் உள்ளே செல்லும் நான், இடைவேளையில்தான்  என் முன் சீட்டில் அமர்ந்திருந்தவர் என் அப்புச்சி என்றறிவேன்.பிட்டு ஓட்டி முடித்ததும் கிளம்பிவிடும் நாங்கள்,படம் முடிந்து இறுதியாக வரும் அப்புச்சியிடம் கடைசிவரை சிக்கியதே இல்லை.எழுத்தாளர் கோவை இருதயா தியேட்டர்,முருகன் தியேட்டர்,காந்திபுரம் அருள் தியேட்டர் இவற்றில் ஆடிக்கொருமுறை ஆணும்பெண்ணும் உருளும் படத்தை காட்டுவார்கள் என்றிருந்தார்.என்னுடைய காலத்தில் இருதயா தியேட்டர் மட்டும் இருந்த போதிலும். சிங்காநல்லூரில் அம்பாள்,மற்றும் பீளமேடு மணீஸ் தியேட்டர்கள்  தான் எங்களுக்கு வாழ்க்கைக் கல்வி பயிற்றுவித்தன.பீளமேடு மணீஸ்ல் இரவு எட்டேமுக்கால் காட்சி மிக பிரபலம்.அம்பாள் தியேட்டரில்  காலைக் காட்சிக்கு ஒரு ரூபாய் டிக்கெட்டுக்கு மட்டும் கூட்டம் முண்டியடிக்கும்.ஒருமுறை என் மாமா பையன் பதினைந்து வயதாகியும் கூளையாக இருந்ததால் தியேட்டர் மேனேஜர் அவனை மட்டும் படம்பார்க்க அனுமதி மறுத்து பின்பு அடுத்தமுறை வரும்பொழுது டிசி ஜெராக்ஸ் காட்டிவிடுகிறோம் என்று சொல்லி அனுமதி பெற்றது,மற்றும் முண்டியடிக்கும் ஒரு ரூபாய்க் கவுண்டரில் யாரோ ஒருவரின் தள்ளலில் கீழே விழுந்து,எழுந்து அவிழ்ந்து போன  லுங்கியை முடிச்சுப்போட்டுக் கட்டிக்கொண்டு அவனுக்கும் சேர்த்து மூன்று டிக்கெட் எடுத்து வெற்றி வாகை சூடிய 'தும்தி'குமார் உட்பட பலரையும் நினைவுக்குக் கொண்டு வந்தது.

       திருமண அழிப்பிதழ் குறிப்பில் வரும் சின்னச்சாமி போல பல பெப்பலத்தான்கள் இப்பொழுதும் ஏதேனும் ஒரு டாஸ்மாக்கில் சரக்கடிக்கக் கையேந்திக்கொண்டுதான் இருக்கின்றனர்  வாழ்கை தந்த  வேறுவேறான அனுபவங்களால்.

        எழுதிக்கொண்டிருக்கும் கதையின் கதாபாத்திரமாகவே மாறிவிடும் ஒரு சில எழுத்தாளர்களைப் போலான ஏகாம்பரத்தை மல்லிகா என்றொரு ஆவியில் தனக்கே உரிய எள்ளலுடன் தட்டிலேப்பியிருக்கிறார்.

         எழுத்துபிழையாலும்,திரும்பத் திரும்ப வரும் சில பத்திகளாலும் முகச் சவரம் செய்யலியோ படிக்க முடியவில்லை.


நினைவோடைக் குறிப்புகள் என்றாலும் நினைவில் நிற்கிறது இந்த அப்புச்சி வழி.

           

             

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

மகா சிவராத்திரியும் சில தேநீர் கோப்பைகளும்- யாழி (கவிதை புத்தக வெளியீட்டு விழா)

          கடந்த ஞாயிறு(14/9/14) அன்று கோவை ஆர்த்ரா அரங்கில் நடைபெற்ற கவிஞர் யாழி அவர்களின் "மகா சிவராத்திரியும் சில தேநீர் கோப்பைகளும்" கவிதை புத்தக வெளியீட்டு விழா நிகழ்வுகளின் புகைப்படங்கள்.









திங்கள், 15 செப்டம்பர், 2014

அறை எண் 57 ல் கடவுள் ( அலமேலு லாட்ஜ் )

         
         அது ஒரு இயல்பான சனிக்கிழமை ( 13/9/14) போல அல்லாது, எனக்கு தண்ணி காட்டும்  நிகழ்வாகவே பட்டது.ஆம் அன்றெனக்கு விடுமுறை.நான் வீட்டில் இருக்கிறேன் என்பதையறிந்தே குடிநீர்க் குழாயில் தண்ணீர் திறந்து விட்டிருப்பார்கள் போலும் TWAD காரன்.என் மனைவிக்கு அன்று  அலுவலகம் செல்லவேண்டி இருந்ததால் தண்ணீர்  பிடிக்கும் வேலை என் தலையில் விழுந்தது.ஒவ்வொரு முறையும் நான் வீட்டில் இருக்கும்பொழுதே தண்ணீர் திறந்துவிடுவதன் சூழ்ச்சியை  அறியும் முயற்சி இன்னும்  தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


           அந்த இறுதிக் குடத்தைச்  சுமந்து வந்த வேளைதான் என் அலைபேசி ஒலித்தது.குடத்தை  வைத்துவிட்டு வருவதற்குள் அமிழ்ந்துபோனது அலைபேசியின் ஒலி. சரி எப்பவும் போல டேட்டா கார்டுக்கு பணம் கட்ட ரிலையன்ஸ்ல் இருந்துதான் அழைத்திருப்பர் என்று அலைபேசியைக் கையில் எடுத்ததும் ஒரு இன்ப அதிர்ச்சி.நந்தன் அண்ணாதான் அழைத்திருந்தார்.அவரின் அழைப்பை நான் ஏற்காததால்,அவரின் ஏமாற்றம் என் அலைபேசியில் மிஸ்டு காலாகப் பதிவாகி இருந்தது.உடனடியாக அவரைத்  தொடர்பு கொண்டதும், மகி நாளைக்கு காலைல நானும் நீயும் இளமணி அண்ணா வீட்டுக்கு போய் சாப்பிட்டு விட்டு நேரா யாழி அவர்களின் கவிதை புத்தக வெளியீட்டு விழா நடக்கும் அரங்குக்குச்  சென்றுவிடலாம், இன்று மாலையில் நான் கிளம்பும் பொழுது நாளைக் காலையில் கோவை வந்து தங்கும் விடுதியின் பெயரைச் சொல்கிறேன் என்றுவிட்டு வைத்துவிட்டார்.எனக்கு இன்ப அதிர்ச்சிதான் இதற்குமுன்பு வரை ஓரிருமுறைதான் அவர் என்னோடு அலைபேசியில் பேசி இருந்தார்.

            அடுத்த நாள் ஞாயிறு காலை 7.30 மணி வரை அவரிடம் இருந்து அழைப்பு வராததால் நானே தொடர்பு கொண்டேன்.அவர் வந்த பேருந்து, போக்குவரத்து நெரிசலால் ஒன்னரை மணி நேரத் தாமதம் என்றும்,இப்பொழுதுதான் பெருந்துறையைத் தாண்டி இருப்பதாகக்  கூறியபொழுது, எப்படியும் அவர் கோவை வந்துசேர 9.00 மணி ஆகிவிடும் என்பதை நானே யூகித்துக் கொண்டேன்.சரியாக 9.15 மணியளவில் என்னை அழைத்து தான் விடுதி அறைக்கு வந்துவிட்டதாகவும், நீ வருவதற்குள் குளித்துத்  தயாராகி விடுகிறேன் என்றார்.நானும் அண்ணன் seema senthil அவர்களும், நந்தன் அண்ணா தங்கியிருந்த அறைக்கு 9.35 மணிக்குச் சென்று அறை எண்  57 ஐத் தட்டியதும் முகதரிசனம் தந்து, தான் உடை மாற்றிக்கொள்ள ஐந்து நிமிட அவகாசம் கேட்டது எங்கள் இருவரிடமும், இதுகாறும் நான் புகைப்படங்களில் பார்த்தும்,செவி வழி குரலைக் கேட்டிருந்த அந்தக் கடவுள். எங்கள் இருவருக்கும் சேர்த்து ஐந்து நிமிடம் என்று சொன்னபோதும்,ஐந்தை இரண்டால் வகுத்து  ஈவு 2  மீதி  1 என்ற கணக்கில் நான்கு நிமிடத்தில் கிளம்பி வந்துவிட்டார்.இளமணி அண்ணாவிடம் அவரின் வீட்டுக்கு வழி கேட்டுவிட்டு வண்டியைக் கிளப்பியது முதல் வீடு சென்று சேர்வதற்குள் இடைப்பட்ட தொலைவிற்குள் இருவருக்குமான நெருக்கத்தை வளர்த்துவிட்டிருந்தார் தன் அரவணைப்பான பேச்சினால்.

               இளமணி அண்ணா வீடு வந்ததும் சிறிய உரையாடலுக்குப் பின் அனைவரும் உணவருந்தத் துவங்கினோம்.வசீகரப் புன்னகையோடு பரிமாறிய அம்மாவின் கைப் பக்குவத்திற்கும்,ருசிக்கும் அனைவரும்  கட்டுண்டுபோனோம் என்று சொல்வது இங்கு சாலச்சிறந்தது.ஒரு சில வேலைகளைச் சிறப்பாகச் செய்யும் கைதேர்ந்தவர்களை ,அந்த வேலை அவர்களுக்குக் கைவந்த கலை என்று சொல்லுவோம்.இளமணி அண்ணாவுக்கும்,அம்மாவுக்கும் வீடு தேடி வருபவர்களை உபசரிப்பதுதான் அவர்களுக்கு  கைவந்த கலை என்பதை நான் உணர்ந்த தருணம் அது. இளமணி அண்ணாவுக்கும்,அம்மாவுக்கும் என் அன்பை உரித்தாக்கிக் கொள்கிறேன்.நேரமின்மை காரணமாய் உடனே அரங்கிற்கு கிளம்பினோம்.எங்கள் மூவரோடு இளமணி அண்ணாவும் பயணப்பட்டார்.






                 அரங்கிற்குள் நுழையும் முன்னமே விழா  துவங்கி இருந்தது.  வாழ்த்துரை வழங்கவேண்டிய வரிசையில் நந்தன் அண்ணாவும்  இருந்தார்.அதிகப் பணிச்சுமை காரணமாய் கவிதை புத்தகத்தைப் படிக்க முடியவில்லை.ஆதலால் அரங்கிற்கு வெளியே உள்ள படியில் அமர்ந்து புத்தகத்தில் இருந்த கவிதைகளில்  சில குறிப்புகளை எடுத்துக் கொண்டு தன் முறை வந்ததும் வாழ்த்தி முடித்தார்.







            விழா முடிந்ததும், கதை உரையாடல்   நிமித்தமாய் திருச்சி செல்லவேண்டும் என்று என்னிடம் முதலே கூறியிருந்தார்.அதற்கேற்ப அவரின் சிஷ்யர் ஒருவரின் வீட்டுக்கு மதியம்  சென்றுவிட்டு சரியாக மாலை  5 மணியளவில் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் அலைபேசியில் என்னை அழைத்து, தான் கிளம்பிவிட்டதாகக் கூறினார்.சுமார் 5 மணிநேரம் நான் அவரோடு இருந்திருப்பேன்.அவர் கிளம்புகிறேன் என்றதும் நெடுநாளைய நண்பரொருவரைப் பிரிந்ததைப் போல ஒரு சுணக்கம் மனதில் தோன்றியது.அதற்குக்  காரணம் அவரின் எதார்த்தமான பேச்சு.

                இன்று காலை திருச்சியில் வேலை முடிந்ததும்  சென்னைக்குப் புறப்பட்டு மாலை வீடு சென்றடைந்ததும் என்னைத் தொடர்பு கொண்டு தான் சென்னை வந்து சேர்ந்ததாகக் கூறினார்.மற்ற அனைவரைப் பற்றியும் விசாரித்து விட்டு, அண்ணன் seema senthil  அவர்களின் எண்ணைத் தனக்குக் குறுஞ்செய்தியில் அனுப்பிவிடுமாறு கூறிவிட்டு மீண்டும் நல்லதொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம் என்று கூறி விடைபெற்றார்.இதோ இன்றைய நாள் முழுவதும் நேற்று அவர் என்னுடன் பேசிய பேச்சுக்கள் என்னைச் சுற்றிக்கொண்டே இருந்தன.ஒரே நாளில் அனைத்தையும் பகிர்ந்துகொள்ளமுடியாது என்ற எதார்த்தத்தைப் புரிந்தவன் என்பதால் மீண்டும் அவரைச் சந்திக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

  நான் ஒவ்வொரு புத்தகத்தையும் படித்து முடித்த பின் அப்புத்தகம் எந்தக் கருத்தைத் தன்னுள் பதிந்திருக்கிறது என்பதை முகநூலில் பதிவாக வெளியிடும் முன்னரும், வெளியிட்ட பின்பும் அப்பதிவைப் படிக்கும் தோழர்களின் மனதில்  என்னை நானே பெரிய விமர்சகனாகக் கருதிக்கொள்வதாகப் பட்டுவிடுமோ என்றெண்ணியதுண்டு.ஆனால் இதுவரை எனது பதிவுகள் பற்றிய  எதிர்மறைக் கருத்துக்கள் வந்ததில்லை என்றாலும் இனிமேல் அப்படி எதுவும் வந்துவிடக்கூடாது என்பதாலும், எனக்குப் பிடித்தவற்றையே பதிவாக இடுகிறேன்,இது யாரையும் நிர்பந்திக்கக் கூடியது அல்ல,முழுக்க முழுக்க நான் படித்ததை தோழர்களுடன் பகிர்ந்துகொள்ளவே அன்றி வேறல்ல என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.




                                                   பின் நவீனத்துவம் 

                       ( கம்யூனிச எதிர்ப்பின் முற்போக்கு முகமூடி )





தோழர் திருப்பூர் குணா அவர்களின் இந்தப் புத்தகம் மொத்தம் 5 தலைப்புகள் கொண்ட கட்டுரையால் பின் நவீனத்துவத்தையும் , அதன் கோர முகத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

* மக்கள் தலித் இயக்கங்களும்- போர்டுபவுண்டேசன் தலித் இயக்கங்களும்

       தலித் இயக்கங்கள் தோன்றிய காலந்தொட்டு அவைகள் ஏன் ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்படவோ,பொதுவுடைமைக் கட்சிகளுடன் கூட்டு சேரவோ இன்றி ஆண்ட,ஆளும் அரசுகளின் நிழலாகவே தொடர்கின்றன என்பதற்குப் பின்னால் இருக்கும் பின்நவீனத்தின் கொடுங்கரங்களை நம்முன் அடையாளப்படுத்தி விடுகிறார்.

* சாதிவேறி பா.ம.க-வின் தோற்றமும்,வளர்த்துவிட்ட பின்நவீனத்துவ வாதிகளும்

          பின் நவீனத்துவ வாதிகள் அரசாங்கத்தின் கைக்கூலிகளாக செயற்பட்டு கம்யூனிஸ்டுகளுக்கும்,நக்சல்பரிகளுக்கும் மாற்றாக பா.ம.க வை வளர்த்துவிட்டதையும், மருத்துவரின் குணங்களையும் விளக்கியிருக்கிறார்.

* பின்நவீனத்துவவாதிகளின்  ஒப்புதல் வாக்குமூலம்

          தங்களால் வளர்த்துவிட்ட பா.ம.க வேறு ஒரு வடிவில் வளர்ந்து நிற்பதை சற்றும் எதிர்பாராதது போல எவ்வாறு  மாற்றி மாற்றிப்பேசி பல்டியடிக்கின்றனர் பின்நவீனத்துவவாதிகள் என்பதை அலசியுள்ளார்.

* தமிழ்நாட்டில் பாசிசத்தை உருவாக்கும் சாதி ஆதிக்க அடையாள அரசியலும்- பின்நவீனத்துவமும்

          முற்போக்கு முகமூடியணிந்து ஈழ ஆதரவாளர்களாக தங்களைக் காட்டிக்கொண்டு மக்களிடம் தங்கள் சாதி ஆதிக்கத்தைத் தூண்டி,ஆண்டபரம்பரை என்ற பொய்யான திரிபையும் கூறி அவர்களை பாசிசத்துக்கு உள்ளாக்கும் வேலையைக்  கனகச்சிதமாக செயல்பட்ட பின் நவீனத்துவத்தினை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.

* போராடும் மாணவர்களிடையே கம்யூனிச பீதியும் - பின்னணியும்

          பல ஆண்டுகள் கழித்துத்  தன்னெழுச்சியாகத்  துவங்கிய மாணவர் போராட்டம் நீர்த்துப்போனதையும்,அவர்களின் பால் ஊட்டப்பட்ட கம்யூனிச பீதியையும், இலங்கையின்பால் இந்தியா கொண்டுள்ள நட்புறவின் அடிப்படையையும் தெளிவாகக் கூறியிருக்கிறார்.


மொத்தத்தில் தோழர் திருப்பூர் குணா அவர்கள், பின் நவீனத்துவத்தைக் கையிலெடுத்து அரசுக்குச் சொறிந்துவிடும் வேலை செய்பவர்களை வெட்டவெளிச்சமிட்டுக் காட்டிவிடுகிறார். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

தோழருக்கு வாழ்த்துக்கள்.


செவ்வாய், 9 செப்டம்பர், 2014

வலி

எனது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும்,  என் மனக் கண்ணுக்குள் திரும்பச் சுற்றவிட்டுப் பார்க்கிறேன்.

வலிகளால் நிறைந்ததுதான்  என் பாதை
வலியோடேதான் இன்னும் பயணிக்கிறேன் என் பாதையில்..

 'வலி'யைப் பதிய
வார்த்தைகள் தேடியபொழுது,
'வேதனை'யாய் மாறிவிட்டிருந்தது.
வேதனை தீரப் பிரார்த்திப்பதா?
யாரிடமேனும் கூறி ஆற்றுப்படுத்திக்கொள்வதா? என்ற
மனக்கிலேசத்தின் மெல்லிடைவெளியில்
நரகத்திற்கு நகர்ந்துவிடுகிறது வேதனை.
மனிதத்தின் மறைவே
சொர்க்கமும்,நரகமும் அறிந்துகொள்ளவா?
அறிந்த அடையாளமும் இல்லை.
தெரிந்த தெளிவும் இல்லை.
மனித வாழ்வியலில்,
வலி எதார்த்தமாகிறது.

-
மகிவனி