வெள்ளி, 12 செப்டம்பர், 2014

  நான் ஒவ்வொரு புத்தகத்தையும் படித்து முடித்த பின் அப்புத்தகம் எந்தக் கருத்தைத் தன்னுள் பதிந்திருக்கிறது என்பதை முகநூலில் பதிவாக வெளியிடும் முன்னரும், வெளியிட்ட பின்பும் அப்பதிவைப் படிக்கும் தோழர்களின் மனதில்  என்னை நானே பெரிய விமர்சகனாகக் கருதிக்கொள்வதாகப் பட்டுவிடுமோ என்றெண்ணியதுண்டு.ஆனால் இதுவரை எனது பதிவுகள் பற்றிய  எதிர்மறைக் கருத்துக்கள் வந்ததில்லை என்றாலும் இனிமேல் அப்படி எதுவும் வந்துவிடக்கூடாது என்பதாலும், எனக்குப் பிடித்தவற்றையே பதிவாக இடுகிறேன்,இது யாரையும் நிர்பந்திக்கக் கூடியது அல்ல,முழுக்க முழுக்க நான் படித்ததை தோழர்களுடன் பகிர்ந்துகொள்ளவே அன்றி வேறல்ல என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.




                                                   பின் நவீனத்துவம் 

                       ( கம்யூனிச எதிர்ப்பின் முற்போக்கு முகமூடி )





தோழர் திருப்பூர் குணா அவர்களின் இந்தப் புத்தகம் மொத்தம் 5 தலைப்புகள் கொண்ட கட்டுரையால் பின் நவீனத்துவத்தையும் , அதன் கோர முகத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

* மக்கள் தலித் இயக்கங்களும்- போர்டுபவுண்டேசன் தலித் இயக்கங்களும்

       தலித் இயக்கங்கள் தோன்றிய காலந்தொட்டு அவைகள் ஏன் ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்படவோ,பொதுவுடைமைக் கட்சிகளுடன் கூட்டு சேரவோ இன்றி ஆண்ட,ஆளும் அரசுகளின் நிழலாகவே தொடர்கின்றன என்பதற்குப் பின்னால் இருக்கும் பின்நவீனத்தின் கொடுங்கரங்களை நம்முன் அடையாளப்படுத்தி விடுகிறார்.

* சாதிவேறி பா.ம.க-வின் தோற்றமும்,வளர்த்துவிட்ட பின்நவீனத்துவ வாதிகளும்

          பின் நவீனத்துவ வாதிகள் அரசாங்கத்தின் கைக்கூலிகளாக செயற்பட்டு கம்யூனிஸ்டுகளுக்கும்,நக்சல்பரிகளுக்கும் மாற்றாக பா.ம.க வை வளர்த்துவிட்டதையும், மருத்துவரின் குணங்களையும் விளக்கியிருக்கிறார்.

* பின்நவீனத்துவவாதிகளின்  ஒப்புதல் வாக்குமூலம்

          தங்களால் வளர்த்துவிட்ட பா.ம.க வேறு ஒரு வடிவில் வளர்ந்து நிற்பதை சற்றும் எதிர்பாராதது போல எவ்வாறு  மாற்றி மாற்றிப்பேசி பல்டியடிக்கின்றனர் பின்நவீனத்துவவாதிகள் என்பதை அலசியுள்ளார்.

* தமிழ்நாட்டில் பாசிசத்தை உருவாக்கும் சாதி ஆதிக்க அடையாள அரசியலும்- பின்நவீனத்துவமும்

          முற்போக்கு முகமூடியணிந்து ஈழ ஆதரவாளர்களாக தங்களைக் காட்டிக்கொண்டு மக்களிடம் தங்கள் சாதி ஆதிக்கத்தைத் தூண்டி,ஆண்டபரம்பரை என்ற பொய்யான திரிபையும் கூறி அவர்களை பாசிசத்துக்கு உள்ளாக்கும் வேலையைக்  கனகச்சிதமாக செயல்பட்ட பின் நவீனத்துவத்தினை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.

* போராடும் மாணவர்களிடையே கம்யூனிச பீதியும் - பின்னணியும்

          பல ஆண்டுகள் கழித்துத்  தன்னெழுச்சியாகத்  துவங்கிய மாணவர் போராட்டம் நீர்த்துப்போனதையும்,அவர்களின் பால் ஊட்டப்பட்ட கம்யூனிச பீதியையும், இலங்கையின்பால் இந்தியா கொண்டுள்ள நட்புறவின் அடிப்படையையும் தெளிவாகக் கூறியிருக்கிறார்.


மொத்தத்தில் தோழர் திருப்பூர் குணா அவர்கள், பின் நவீனத்துவத்தைக் கையிலெடுத்து அரசுக்குச் சொறிந்துவிடும் வேலை செய்பவர்களை வெட்டவெளிச்சமிட்டுக் காட்டிவிடுகிறார். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

தோழருக்கு வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக