திங்கள், 19 ஜனவரி, 2015

ப்ரியம் என்பது.. என்னைப் பொறுத்தவரை ப்ரியத்தை சொல்லாமலிருப்பது. அம்புட்டுதான்.. - நந்தன் ஸ்ரீதரன் 5/dec/2013

     
            கடந்த வாரம் சென்னை புத்தகக் கண்காட்சியில் நந்தன் அண்ணாவைப் பார்த்துப் பேசிவிட்டு வந்தது முதல்,அண்ணனின் "தாழி" சிறுகதைத் தொகுப்பினைப் பற்றி நாம் எதுவும் எழுதவில்லையே,அண்ணன் ஏதேனும் நினைத்துக் கொள்வாரோ என்றெண்ணினேன். நேரம் கிடைக்கவில்லை என்று கூறுமளவு பருப்பல்ல நான். இன்னும் என் பின்முதுகைத் தொற்றித் தொடரும் பொருளாதாரச் சுணக்கந்தான் உண்மை காரணம். என் அப்பனின் பெயர் பொறிக்கப்பட்ட அரிசியைத் தான்  இன்னும் நான் உட்கொள்கிறேன் . இதை வெளிப்படையாகக் கூறியிருந்தாலும்  தான் செய்யும் எந்தச்  செயலுக்கும்  நியாயம் கற்பிக்கும் சராசரி மனிதனைப் போன்றவொரு  தோற்றம் எனக்குள் வந்து செல்வதை மறுக்க இயலவில்லை.பேராளுமைகளே தாழி பற்றி எழுதத் துவங்காத சூழலில் நான் எழுதுவதை அதிகப்பிரசங்கித்தனமாகவே நினைத்திருந்தேன். ஆனால் புத்தகம் வெளிவந்து ஒரு மாதத்தை நெருங்க விருக்கும் இத்தருணத்தில் எழுத யத்தனித்ததை சரியெனக் கொள்கிறது என் உள்மனம். 

          

                                                            " தாழி"


                    நந்தன் அண்ணா எனக்கு  முகநூலில் 2013 டிசம்பர் மாதம் முதல் அறிமுகம். அதே மாதத்தில் ஐந்தாம் தேதி அவரிட்ட நிலைத்தகவலில் இருந்து அவரின் நட்பு வட்டத்திற்குள் இணைந்தேன்.அவரின் எழுத்துக்களை  வாசிக்கையில் எனக்கு கடந்து சென்ற என் பால்யத்தின்  நினைவுகளை மீட்டுத் தந்தது போலப்  பட்டது.அன்று தொட்டு இன்றுவரை அவரின் கவிதைகள்,கட்டுரைகள், சிறுகதைகள் அனைத்தையும் வாசித்து விடுவேன். அந்த வரிசையில் அமைந்த சிறுகதைகளின் தொகுப்புத்தான் இந்த "தாழி".


                     தொகுப்பில் உள்ள நிறைய சிறுகதைகள் இணைய,மாத இதழ்களில்  வெளியானவை.அவைகள் வெளியான அன்றே  அனைத்தையும் படித்து விட்டு வாலண்டியராய்க்  கருத்தைப் பதிவு செய்து விடுவேன்.இத்தொகுப்பில் உள்ள 'தேய்ந்த நிலாக்களின் காலம்" கதைகுறித்து நான் வசிக்கும் கோவையைச் சார்ந்த இன்னொரு முகநூல் நபரோடு அண்ணனுக்கு மிகப் பெரிய கருத்து வாதம் நடந்தது இன்னும் என் நினைவில் உள்ளது.
         'ஒரு முகம்,ஒரு பெயர் மற்றும் செல்வி என்றொரு சிநேகிதி.." யில் வரும் ஐக்கோடாய் நீங்கள் இருந்திருப்பீர்களோ? என்று  நானறியேன்,ஒருவன் இருப்பினும் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு திராவிடச் செல்வி ஐயமின்றி வந்து சென்றிருப்பாள்.
          "செல்லக்கிளியின் தம்பி" அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு கதை .இதுபோன்ற கதையைக்  கையில் எடுக்க ஒரு துணிச்சல் வேண்டும். பெயரளவுக்கு சமத்துவம் பேசிக்கொண்டு, புறவாசலில் கவுரவத்திற்காக கொலைகள் செய்துகொண்டிருக்கும் பலரின் முகமூடியைக் இக்கதை கிழித்தெறிகிறது.
             "இந்திரனின் கண்கள்" " மேலே இருந்து கொட்டும் சொற்கள்" மற்றும் "ஒரு ஒருதலைக் காதல் கதை" ஆகிய கதைகளைப் படிக்கையில் இது படைப்பாளரின் அனுபவமோ என்றெண்ண வைக்கிறது.அதுவும் முதல் கதையில் மூழ்கத் துவங்குகையில், இவுரு எப்படா நம்மள நோட்டம் விட்டாரு? என்ற சந்தேகத்தையும்  விதைத்து விடுகிறது.  உங்கள் அலமாரியை அலங்கரிக்க அர்த்தமுள்ள ஒரு சிறுகதைத் தொகுப்பு என்பதோடு, இவரின் எழுத்து நடை வளரும் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கக் கூடிய ஒன்று என்பதும்   என் கருத்து.


              இப்படியே நல்ல விசயங்களை மட்டும் சுட்டிக் காட்டி விட்டால் போதுமா? அது சரியா?.குறைகளைச் சுட்டிக் காட்டினால் தானே வாசிப்பாளன் என்பதன் அர்த்தம் நிறைவேறும். அதனடிப்படையில் பார்த்தால் பெரும்பாலான கதைகள் சிறிய பட்ஜெட் படம்போல பயணக் குறிப்புகளைத் தாங்கியோ, அல்லது ஒரு குடியிருப்புக்குள் அடங்கியோ சென்னையைச் சுற்றியே கதைக்களம் அமைந்து விடுகிறது. இது வாசிப்பாளனைச்  சோர்வுறச் செய்கிறது.அதே போல இவரின் பார்வையில் இருந்தே கதாபாத்திரங்களைப் பார்க்கச் செய்து விடுவதால், சில கேரக்டர்கள் மனதுக்கு ஒட்டாமலே பயணிக்கின்றன. எழுத்து வடிவங்களை இன்னும் மேம்படுத்தி இருக்கலாம்.பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.


                         மற்றபடி ,  மொத்தத் தொகுப்பையும் ஒரே மூச்சில் படித்து முடித்தபின்தான் கீழே வைப்பீர்கள் என்பதற்கு நான் உத்தரவாதம்.அப்புறம் என்ன? என்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்தப் பதிவின் தலைப்பை மீண்டும் படித்து விடுங்கள்.
                         


புதன், 31 டிசம்பர், 2014

எந்நிலை வரினும்

                      இந்த ஆண்டின் இவ்விறுதிப்  பதிவைப் பதிவதில் எனக்குப்  பெரும்மகிழ்வே.மீதமிருக்கும் இச்சில மணி நேரங்களை இந்தாண்டில் நடந்த நிகழ்வுகளை மீண்டும் அசைபோட யத்தனிக்கிறேன்.சூதும்,வஞ்சகமும், சுயநலமும் மிக்க சமுதாயத்தில் ஒருவன் நேர்மையாளனாய் வாழ்ந்துவிடுதல் கடினமே.எதார்த்தவாதிக்கு அந்த எதார்த்தமே எதிரி என்பதை ஆண்டு முழுதும் நொடிக்கு நொடி நான் உணர்ந்த வருடமிது.எண்ணித்துணிக கருமமென துணிந்தேதான் எதிர்கொண்டேன் அத்துணையையும்.

                       ஆண்டின் தொடக்கத்தில் முடங்கிய தொழில் இன்றும் எழவிடாமல் தடுக்கும் பொருளாதாரம் ஒருபுறம். உற்பத்திக்கு மூலப்பொருட்கள் கடனுக்கு வழங்கிய நிறுவனத்தாரின் தொடர் அழைப்புக்கள். நட்பு ரீதியில் உதவிய உள்ளங்களின் முகங்களைச் சந்திக்க முடியாத நிலைமை இவற்றையெல்லாம் தாண்டி என் நிலையைப் புரிந்துகொள்ளாது நிலைகுலைய வைத்த குடும்ப உறவுகள்... எனத்  தொடர்ந்து நீளும் பட்டியல். இது ஏன்?  எதனால் இந்த நிலைமை...?

தள்ளாத வயதில் மற்றவர் கரங்களை எதிர்நோக்கும் நிலைமை, துள்ளித்திரியும் என் வயதில் எனக்கு  நேர்ந்ததுதான் காரணம்.

                             வெறும் வாக்குறுதிகளாலேயே எனக்கு நம்பிக்கைகளின் கண்ணியை இணைத்து  இவ்வருட இறுதிவரை நாட்களைச் சங்கிலித் தொடரென இன்னும் இழுத்துக்கொண்டு இருப்பவர் ஒருபுறம் 
                              சுயமுடிவு எடுக்கத்  தாமதித்து  சூழலுக்குள் சிக்கித் தவித்த மற்றொருவர் 

                              இவர்களிருவரையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு கர்ண கொடூர  கையறு நிலையில் நான்.
                                நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. 
                        
               அகங்காரத்தில் வார்த்தைச் சவுக்கு சொடுக்கி என் அகங்காயப்படுத்திய பலர்.எங்கே உதவி கேட்டுவிடுவானோ? என விலகி நின்று தற்காத்துக் கொண்டோர்  பலர். அனைவரும் ஒன்றைக் கட்டாயப் பயிற்றுவித்தலில் உணர வைத்தனர், அது பொருளில்லாருக்கு எவ்வுலகமும் இல்லை என்பதுதான்.எதையும் எதிர்கொண்டு சாதிக்கும் துணிவும்,விவேகமும் இருக்கும்பொழுது ஒருவன் அவ்வளவு எளிதில் உடைந்தா போய் விடுவான். காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கையில், கூடியிருந்த அனைவரையும் மகிழ்வித்துப் பார்த்தவன் நான்.ஆனால் இன்று பகிர்ந்துகொள்ள ஆளற்று, என் உள்ளத்தையே உற்ற தோழனாக்கி, சந்தித்த சோதனைகளைச் சாதனைகளாக்க உள்ளத்திற்கு  உரமேற்றியுள்ளேன். இவ்வன்கொடுங்காலத்தில்  முக நூல் நட்புகள் என் சிந்தனை சிதறா வண்ணம் அவர்களின் பதிவுகளால் என்னை ஆற்றுப் படுத்தியதுண்டு.அதை நினைவுகூரும் விதமே இந்தப் பதிவு.அதோடு இது தனிப்பட்ட என் நிலைமையைக் கூறி உங்களிடம் பச்சாதாபம் பெறக்கூடியதல்ல.சிறு பகிர்தலெனக் கொள்ள பணிக்கிறேன் உங்களை அன்பால்.

                   உங்களைப் பொறுத்த வரை இது முடியப்  போகும் ஆண்டு,ஆனால் எனக்கோ என்னை முழுமை அடைய  வைத்த ஆண்டு.

                   கொண்டாட்டங்களைத் தவிர்க்கும் இயல்புடையது என் மனது. அவ்வகையில் இந்த ஏகாதிபத்திய திணிப்புக் கொண்டாட்டங்களை அறவே வெறுத்து ஒதுக்கினாலும், எண்களால் மாற்றம் பெரும் ஆண்டுக்காய் வாழ்த்தித்தான் ஆகவேண்டும். 
கடக்கப் போவதைக் கிடப்பில் போட்டு வருவதை நெஞ்சுரத்தோடு எதிர்கொள்ளுங்கள். எந்நிலை வரினும் நிலை குலையாது நிமிர்ந்து நில்லுங்கள் வாழ்வு வசப்படும்.

இதோ..
புட்டத்திலொட்டிய மண்ணைத் தட்டிஎழுந்து நிற்கும் சிறுவனெனத் தயாராகிவிட்டேன்   நான்  வரும் ஆண்டை ஆண்டு அனுபவிக்க...

அனைவருக்கும் ஆண்டு மாறும் தின நல்வாழ்த்துக்கள்.

               

                                   

                            

வியாழன், 16 அக்டோபர், 2014

தேவதைகளின் வீடு - எம்.ஸ்டாலின் சரவணன்.

       
               எனக்கு விவரம்தெரியும் காலம்தொட்டே என் அப்பா 'குங்குமம்' இதழின் வாசகர்.அதனால் வாரம் தவறாமல் அதைப்  படித்துவிடும் வாய்ப்பு எனக்குக் கிட்டும்.அதில் வரும் வாசகர் கவிதைகள் எனக்குப் பிடிக்கும் என்பதால் அந்தப் பகுதிக்குத்  தனி கவனம் செலுத்துவேன்.அவ்வாறு தொடர் வாசிப்பில் இருந்த நாட்களில் சிலரின் கவிதைகளின்பால் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதுண்டு.அதில் என்னைக் கவர்ந்தவர்களில் ஸ்டாலின் சரவணனும் ஒருவர். முகநூலில் நண்பராக அவருடன் இணைந்த பின்பு இன்னும் நெருங்கி அவரின் படைப்புக்களை கவனிக்கும் வாய்ப்பைப்  பெற்றேன். எனது வேண்டுகோளுக்கு இணங்கி தனது முதல் கவிதைப் புத்தகமான ' தேவதைகளின் வீடு ' அனுப்பியிருந்தார்.உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவர் எனக்கு புத்தகம் அனுப்பி இரண்டு வாரங்களுக்கும் மேல் இருக்கும்.உடனே அதைப் படித்துவிட்டேன் என்றாலும், பதிவிட தாமதத்திற்கு முழுக் காரணமும் நான்தான்.இனி புத்தகத்திற்குள் செல்வோம்.
...................................................................................................................................................................

                                                     'தேவதைகளின் வீடு' 

                 கவிஞர்  கடவுளின் கவிதையை முதல் கவிதையாகத் துவங்கி இருக்கிறார்.கடவுள் வாழ்த்தோ என்று அய்யங் கொள்ளாதவாறு, சக மனிதனின் துயர் தீர்ப்பதில்  கடவுளைக் கண்ணுறலாம் என்று இயல்பாகக் கூறிக் கடக்கிறார்.

                   மணல்கடத்தலால் ஆறுகள் அழிந்து வருவதை இவ்வளவு எளிதாக இதுவரை நான் படித்ததில்லை.  
                   
                     'ஆறு' கொலை 
                     தடயம் சிக்கியது 
                     மணல்லாரி  தடம்  

                   கிராமத்து வாழ்க்கையில் நம்முடன் ஒன்றெனக் கலந்திருந்த சிட்டுக்குருவிகளை  அவ்வளவு எளிதில் நாம் மறந்துவிட முடியாது.இன்றைய நகரமயமாக்கலால் செல்போன் கோபுரங்களின் அலைவீச்சுக்களால் எளிதில் அவைகளைத் தொலைத்துவிட்டோம்.கவிஞர் அதை எளிமையாகவே நமக்கு உணர்த்துகிறார் இந்தக் கவிதையில்.. 

                    தொடர்பெல்லைக்கு 
                    அப்பால் 
                    சிட்டுக்குருவிகள். 


                     
                    


                 தலைப்புக் கவிதையாக வரும் 'தேவதைகளின் வீடு'   படிக்கையில், பெண் பிள்ளைகளைப் பெற்றவனை இந்தச் சமூகம் பரிதாபத்திற்கு உரியவனாகவே பார்க்கிறது என்பதைப் பதிந்து,  அந்தக் குழந்தைகளை தேவதைகள் என்று வர்ணித்து இந்தச் சமூகத்தின் முகத்தில் கரியைப் பூசிவிடுகிறார்.

                     ஒரு கவிஞனின் ஆரம்பம் என்பது அவன் தன் அம்மாவின் பாசத்தையும்,அன்பையும் உற்றுநோக்குகையில் உருவாகி விடுகிறான் என்பேன் நான். இங்கே தாயை தேவதையாக்கி அழகுபார்க்கிறார் கவிஞர்.

                       வெள்ளை உடையில்தான் 
                       தேவதை இருப்பாள் 
                       எவன் சொன்னது? 
                       அழுக்குடையில் 
                       அடுப்படியில் அம்மா.

                       ஒருமுறை நண்பர் 'நாணற்காடனுடன்' முகநூலில் பேசிக்கொண்டிருந்த பொழுது, நம்மைச் சுற்றியே கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன,உற்று நோக்கினால் நம் கால்களுக்கடியிலும் கிடக்கும் ஓராயிரம் கவிதைகள் என்று அவர் கூறியதை மெய்ப்பித்துள்ளார் நண்பர் ஸ்டாலின்.
                        ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் ஒடுங்கிவிடாது,தன் கற்பனைகளை பல்வேறு   தளத்திலும் பரப்பி அனைத்தையும் கவிதையாகப் பதிவு செய்துள்ளார். 

                          புத்தகத்தில் உள்ள அனைத்து கவிதைகளைப் பற்றியும் எழுதிவிட ஆசைதான், இனி வாசிக்கப்போகும் மற்றவர்களின் வாசிப்பு சுவாரஸ்யத்தை கெடுக்க விரும்பாததால் அம்முயற்சியைக் கைவிடுகிறேன்.

                           இவர்போன்ற இயல்பான கவிஞர்களைக் காலம் நமக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.அந்த வரிசையில் உள்ள நண்பர் ஸ்டாலின் அவர்களைக் கொண்டாடுவதில் எனக்கு மகிழ்ச்சியே.மேன்மேலும் அவர் தன் சிறந்த படைப்புக்களை புத்தகங்களாக வெளியிட எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
                         
                     


திங்கள், 6 அக்டோபர், 2014

சிந்தைக்குள் ஒட்டிய பாடல்...

        சனிக்கிழமை மாலை வீடு திரும்பும் நேரம்போல இருப்பதில்லை இந்த திங்கட்கிழமை காலை.மாணவனாய் இருந்த காலந்தொட்டு, பணியாளனாய்ப் பயணித்து, இன்று ஒரு சிறு தொழில் நிறுவன நடத்துனன் என்றபொழுதும், அடிவயிற்றில் புளிகரைக்காத திங்கள் காலைகள் இருந்ததில்லை ஏதேனும் ஒரு காரணங்களுக்கென. 

         இன்றும் அதே போலதான் துவங்கியது பயணம் பழைய பாடல் ஒன்றை மனதில் பாடியபடி.பாடல் உபயம் சூரியன் எப்.எம், உபயதாரர் சாட்சாத் என் அப்பாதான். இந்த இடத்தில் அப்பாவைப் பற்றிச்  சிறு குறிப்பை வரைந்துவிட்டால் இந்தப் பயணக்குறிப்பைத்  தொடர சுவாரஸ்யமாக இருக்கும்.

         என் அப்பா நடிகர் கார்த்திக் ரசிகர் என்றாலும், பள்ளிப் பருவத்தில் சூப்பர் ஸ்டாரின் ரசிகனான என் வேண்டுகோளுக்கு இசைந்து 'தளபதி' படத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். அப்பொழுது கார்த்திக்கின் 'அமரன்' படமும் ரிலீசாகி இருந்தது.அந்தப் படத்தில் கார்த்திக் தன் முடியைப் படிய வாரி கறுப்புக் கண்ணாடி அணிந்து வருவார்.அதே கெட்டப்பில் சிறு கூச்சமும் இன்றி தளபதி படத்திற்கு என்னை அழைத்துச் சென்று கடுப்படித்தவர்தான் என் அப்பா. அடுத்தவர் விமர்சனங்களை சட்டை செய்யாதவர். மத்தவங்க உங்களப்பத்தி என்னப்பா நினைப்பாங்க என்றால், அவனுகளுக்கு என்ன  HAIRA தெரியும்? என்ற கேள்வியோடு எளிதில் கடந்துவிடுவார். அடுத்தவர்களின் எண்ணங்களைப் பத்திக் கவலைப்படாமல் தினமும் காலை ஏழு மணிதுவங்கி, போதும் என்று தனக்குத் தோன்றும்வரை ஓயாமல் சூரியன் எப்.எம் மை ஒலிக்கவிட்டு அலறவைப்பார் அக்கம்பக்கத்தினரை.இன்று காலை அதே சூரியன் எப்.எம் மில் ஒலிபரப்பாகிய  'அவன்தான் மனிதன்' படப் பாடல் எரிச்சலான என் மனநிலையைத் தாண்டி சிந்தையில் போய் அமர்ந்துகொண்டது.

           வீட்டிலிருந்து கிளம்பி மெயின் ரோட்டுக்குச்  சென்றிருப்பேன், ரோட்டின் இடது புறமாக ஒரு சிறுவன் தன் இடக்கையின்  கட்டை விரலைமட்டும் உயர்த்தி மற்ற விரல்களை உள்மடக்கி தாகத்திற்கு தண்ணீர் கேட்பவன் போன்ற தோரணையில் காட்சியளித்து ணா.. லிப்ட் ணா.. என்றான். வெளிர்ந்த ரோஸ் கலர் சட்டையும், அடர்  சிவப்புக் கால்சட்டையும் அவனை அரசுப்பள்ளிச் சிறுவனாக அடையாளப்படுத்தியது. இன்று அவனது பள்ளிக்கு விடுமுறை என்பதை தினசரி செய்தித்தாளைப் படித்தோ ,அல்லது தொலைக்காட்சிச் செய்தி பார்த்தோ அவனிடம் அன்றைய தினத்தின் நடப்புகளைத் தெரிவிக்க அவன் வீட்டில் ஆளில்லை என்பதை அவனது முக இறுக்கம் காட்டிக் கொடுத்தது.நிற்க. 

             நீங்கள் நினைப்பதுபோல்  எல்லா நேரங்களிலும் லிப்ட் கேற்கும் அனைவரையும் ஏற்றிக்கொள்ளும் மனநிலை உடையவன் அல்ல நான்.வயதானவர்களுக்கு இரக்கப்படுவேன் என்றாலும் நான் சேரவேண்டிய இடம்தாண்டி அவர்கள் செல்ல  வேண்டியிருந்தால் முன்பே  அவர்களிடம் சொல்லிவிட்டு, சம்மதம் எனில் வண்டியில் ஏற்றிக்கொள்வேன். குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கோ, இளவயது ஆண்களுக்கோ கட்டாயம் நான் லிப்ட் தர மறுத்துவிடுவேன்.கை,கால் நல்லாத்தானே இருக்கு நடந்தா என்னவாம்? என்றோ, இளவயசுல என்னடா உங்களுக்கு சொகுசு? என்றோ மனதினுள் எண்ணியவாறே, வண்டி இல்லாத நாட்கள் துவங்கி இதுவரைக்கும் யாரிடமும் லிப்ட் கேட்டுப் பயணிக்காதவன்  என்ற மனநிலையில்  என் செயலுக்கு நானே நியாயம் கற்பித்துக் கடப்பேன். இந்த நிலையில் அந்தப் பள்ளிச் சிறுவனருகில்  வண்டியை நிறுத்தி விசாரித்தபொழுது நான் செல்ல வேண்டிய இடத்திற்கு வலதுபுறம்  அவன் செல்ல வேண்டியதை அறிந்து சாரி சொல்லிவிட்டு கிளம்பினேன்,என்னிடம் ஏதோ சொல்ல முயற்சித்த அவன் குரலை செவிமடுக்காதவாறு.

             சிந்தையில் அப்பனால் ஒட்டப்பட்ட பாடல் ஒலித்தவண்ணம் இருக்க ஒரு ஐம்பதடி தொலைவு சென்றிருப்பேன், இங்கே ஆட்கள் வேலை செய்கிறார்கள் மாற்றுப் பாதையில் செல்லவும் என்றது மஞ்சள்நிறப் பின்னணியிலான செந்நிற எழுத்துக்கள் தாங்கிய மாநகராட்சி இரும்புப் பலகை. உடனடிச் சலிப்புடன் வண்டியை வந்தவழி திருப்பி அச்சிறுவன் நின்ற இடத்துக்கு வந்தேன்.அவனைக் காணவில்லை.அவனிடம் சாரி சொல்லிவிட்டுக் கிளம்பியபோது ரோடு ப்ளாக் என்பதைத்தான் சொல்ல விழைந்தானோ என்று தோன்றியது.அடடா சே என்ன மனுசன்டா நீ? என்று என்னைத் திட்டியபடி விரைந்தபொழுது  அச்சிறுவன் அவன் வீடுநோக்கி  நடந்துகொண்டிருந்தான். அவனை மேலும் நடக்க விடக்கூடாது என்ற எண்ணத்தில் அவனை அலேக்காய் வண்டியில் அமரவைத்து சிறிது நேரத்திலேயே அவனை வீட்டில் இறக்கி விட்டேன். ணா நான் அந்த ரோடு ப்ளாக் னு சொல்ல வந்தன்னா நீங்கதா காது கேட்காம போயிட்டிங்க என்றவனிடம் சாரி தம்பி கவனிக்கல என்றேன்.

               எங்களிருவரின் உரையாடலுக்கிடையில் நடுத்தர வயதுகொண்ட ஒரு அம்மா கையில் கட்டைப்பையுடன் எங்கோ பயணிக்கத்  தயாராய் நின்றபடி அச்சிறுவனிடம் என்னைப் பற்றியும் நான் செல்லும் இடம் பற்றியும்  கேட்டறிந்ததும் அவர் முகம் பிரகாசமானது.அது அச்சிறுவனின் பாட்டியாம். தம்பி தம்பி நீங்க போற இடத்துக்குக் கொஞ்சம் தள்ளித்தான்   நாம்போற இடமிருக்கு  என்னைய அங்க இறக்கிவிட்டுடுங்க தம்பி என்றவரை மறுப்பேதும் சொல்லாதவாறு வண்டியில் ஏற்றிக்கொண்டு கிளம்பினேன். காலையில் சிந்தைக்குள் ஒட்டிக்கொண்ட பாடல் இப்பொழுது  மறுபடியும் மனதில் ஒலிக்கத் துவங்கியது.வண்டி நாற்பது கிலோமீட்டர் வேகம் தொட்டு ஓடிக்கொண்டு இருந்தபொழுது, எரிபொருள் குறைந்து வருவதை ஏதேச்சையாகக்  கண்டேன். மனதில் எழுந்த பீதியை வெளிக்காட்டாது, அந்தம்மா சென்று சேரும் இடம்வரை சென்றுவிட்டால் போதும் என்ற மனநிலையில் வண்டியைச் செலுத்தினேன்.அவர் இறங்கும் இடம் வந்ததும் அவரை இறக்கிவிட்டு அவரின் நன்றிகளை மனதில் நிரப்பிவிட்டு,வண்டியை முடுக்கினேன். வண்டி நகரவில்லை.எரிபொருளின் இருப்பைக் காட்டும் முள் செத்துக்கிடந்தது சிவப்புக்கோட்டைத் தாண்டி.பாக்கெட்டில் பத்துப் பைசா கிடையாது என்ற நிலையிலும் சிந்தையில் ஒட்டிக்கொண்ட அந்தப் பாடலான அவன்தான் மனிதன் படத்திலிருந்து 
"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா"

என்ற பாடல் 

அதிலும் குறிப்பாக 

"நானிருக்கும் நிலையில் உன்னை  என்ன கேட்பேன் , 
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்." 

என்ற வரிகளை இப்பொழுது வாய்விட்டுப் பாடத் துவங்கினேன்  வண்டியை சென்டர் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியபடி.

புதன், 17 செப்டம்பர், 2014

அப்புச்சி வழி ( நினைவோடைக் குறிப்புகள்) வா.மு.கோமு

     
       நடுகல் பதிப்பக  வெளியீட்டின்  4 -வது புத்தகமான ஆல்ரவுண்டர் அண்ணன் வா.மு.கோமு. அவர்களின்  'அப்புச்சி வழி'  ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

       எனக்கான நினைவுகள் பல நான் ஏற்கனவே சிறுகதை வடிவத்திலும்,நாவல் வடிவத்தினுள்ளும் எழுதிவிட்டேன்.இருந்தும் சிலவற்றை இப்படி குறிப்பென்று தனித்து எழுத வசதியாய்த்தான் இருக்கிறது! இப்படியும் ஒரு புத்தகம் இருக்கட்டும்! என்று முன்னுரையிலேயே கூறிவிட்டு, இந்த புத்தகத்தை படிக்கும் நம்மை பழைய நினைவுகளுக்கு நகர்த்திச் சென்றுவிடுவதில் இந்த புத்தகத்தின் நோக்கம் அவர் பார்வையில் வெற்றியடைகிறது.
...................................................................................................................................................................

இனி புத்தகம் பற்றி.....


           ஒரு காலத்தில் ரேபிஸ் எனும் வெறிநாய்க் கடிக்கு மருந்து குன்னூரில்தான் கிடைக்கும். கடிபட்டவர்கள் அங்குதான் சென்று தொப்புளைச் சுற்றி ஊசிபோட்டுக் கொள்ளவேண்டும்.காலம் செல்லச் செல்ல அந்த மருந்து கோவை அரசு மருத்துவமனையிலேயே கிடைக்கப் பெற்றது.என் பெரிய மாமா வீட்டில் அவருக்கும் அத்தைக்கும் என்றும் ஏழரைதான் என்றாலும்,இருவருக்கும் நாய்கள் என்றால் பிரியம்.சிறு வயதில் மாமா பையன் அடிக்கடி அவர்கள் வீட்டில் வளர்க்கும் நாயுடன் விளையாடி கடி  வாங்கி விடுவான்,அவனுக்கு ஊசிபோட அரசு மருத்துவமனைக்கு நானும் செல்வேன்.அங்கு அதிகாலையிலேயே ஊசிபோட பெரிய வரிசை காத்திருக்கும்,இதில் சில இளவயது பெண்களும் ஊசிபோட்டுக்கொள்ள வசதியாக உடைகளை தளர்த்திக்கொண்டு நிற்பதைக் காணலாம். முதல் பகுதியில்  என்னை இந்நினைவுகளுக்கு இழுத்துச் சென்றுவிட்டார்.

             வெட்டி வியாக்யானம் காட்டும் ஒரு சிலரின் உதாரணமாய்  சின்னச்சாமியண்ணனை 'இரும்பும் கரும்பாச்சு இட்டேரியும் பாழாச்சு'  பகுதியில் காட்டியுள்ளார்.

             நம் வாழ்க்கையில் நடந்து முடிந்த சில சுவாரசிய  சம்பவங்கள் எப்பொழுது நினைத்தாலும்,நம்மை அறியாமல் இருக்கும் இடமறியாது 'களுக்' என்ற சிறுசிரிப்பை உதிர்க்கச் செய்யும்.அதை சம்பவங்களும் விசித்திரங்களும் பகுதியில் பதிந்திருக்கிறார்.

               ஊருக்குள் வெறும் வாயில் கயிறு திரிக்கும் ஆட்களை அட்டக்கத்தி என்பர்.இவர்களில் ஒருவரான அட்டக்கத்தி அரவிந்தசாமியை அவருடனான சம்பவங்களில் நம்மை உள்ளுக்குள் இழுத்து அவரின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

                சாமியார்களின் பராக்கிரமங்களால் ஈர்க்கப்பட்டு அவர்களின்  சரச சல்லாபங்களுக்கு உடன்பட்டுப் போகும் பெண்களை, ஏமாந்தவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்! என்கிறார் அவிங்க ரொம்ப நல்லவிய்ங்க பகுதியில்.

               வாஸ்து மாணிக்கத்தை எழுத்தாளரின்  முகநூல் பதிவில் பல முறை படித்துவிட்டேன்.இந்த முறை படித்தபோதும் மகேஸ்வரி இறுதியில் திருந்தியதை நல்ல முடிவாக மனசு ஏற்றுக்கொள்கிறது.                அப்புச்சி வழியை என்னால் அவ்வளவு எளிதில் மறக்க முடியவில்லை.ஒவ்வொருவருக்கும் அவரது அப்புச்சியுடனான மறக்கமுடியாத சம்பவங்கள் இருந்திருக்கும். இந்தப் பகுதியில் எழுத்தாளரின் அனுபவத்தை படிக்கும்பொழுது, பல சம்பவங்கள் என்னுள்ளும் நிழலாடின.நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்  காலத்தில் எங்கள் பகுதியில்  டெக் கேசட்டில் நீலப்படம் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தார் பெரியவரொருவர்.என் அப்புச்சிக்கு அதைப் போட்டுக் காட்டவில்லை எனினும் அவர் தியேட்டருக்குச் சென்றுவிடுவார்.பலமுறை படம் போட்டு சில நிமிடங்கழித்து சகாக்களுடன் உள்ளே செல்லும் நான், இடைவேளையில்தான்  என் முன் சீட்டில் அமர்ந்திருந்தவர் என் அப்புச்சி என்றறிவேன்.பிட்டு ஓட்டி முடித்ததும் கிளம்பிவிடும் நாங்கள்,படம் முடிந்து இறுதியாக வரும் அப்புச்சியிடம் கடைசிவரை சிக்கியதே இல்லை.எழுத்தாளர் கோவை இருதயா தியேட்டர்,முருகன் தியேட்டர்,காந்திபுரம் அருள் தியேட்டர் இவற்றில் ஆடிக்கொருமுறை ஆணும்பெண்ணும் உருளும் படத்தை காட்டுவார்கள் என்றிருந்தார்.என்னுடைய காலத்தில் இருதயா தியேட்டர் மட்டும் இருந்த போதிலும். சிங்காநல்லூரில் அம்பாள்,மற்றும் பீளமேடு மணீஸ் தியேட்டர்கள்  தான் எங்களுக்கு வாழ்க்கைக் கல்வி பயிற்றுவித்தன.பீளமேடு மணீஸ்ல் இரவு எட்டேமுக்கால் காட்சி மிக பிரபலம்.அம்பாள் தியேட்டரில்  காலைக் காட்சிக்கு ஒரு ரூபாய் டிக்கெட்டுக்கு மட்டும் கூட்டம் முண்டியடிக்கும்.ஒருமுறை என் மாமா பையன் பதினைந்து வயதாகியும் கூளையாக இருந்ததால் தியேட்டர் மேனேஜர் அவனை மட்டும் படம்பார்க்க அனுமதி மறுத்து பின்பு அடுத்தமுறை வரும்பொழுது டிசி ஜெராக்ஸ் காட்டிவிடுகிறோம் என்று சொல்லி அனுமதி பெற்றது,மற்றும் முண்டியடிக்கும் ஒரு ரூபாய்க் கவுண்டரில் யாரோ ஒருவரின் தள்ளலில் கீழே விழுந்து,எழுந்து அவிழ்ந்து போன  லுங்கியை முடிச்சுப்போட்டுக் கட்டிக்கொண்டு அவனுக்கும் சேர்த்து மூன்று டிக்கெட் எடுத்து வெற்றி வாகை சூடிய 'தும்தி'குமார் உட்பட பலரையும் நினைவுக்குக் கொண்டு வந்தது.

       திருமண அழிப்பிதழ் குறிப்பில் வரும் சின்னச்சாமி போல பல பெப்பலத்தான்கள் இப்பொழுதும் ஏதேனும் ஒரு டாஸ்மாக்கில் சரக்கடிக்கக் கையேந்திக்கொண்டுதான் இருக்கின்றனர்  வாழ்கை தந்த  வேறுவேறான அனுபவங்களால்.

        எழுதிக்கொண்டிருக்கும் கதையின் கதாபாத்திரமாகவே மாறிவிடும் ஒரு சில எழுத்தாளர்களைப் போலான ஏகாம்பரத்தை மல்லிகா என்றொரு ஆவியில் தனக்கே உரிய எள்ளலுடன் தட்டிலேப்பியிருக்கிறார்.

         எழுத்துபிழையாலும்,திரும்பத் திரும்ப வரும் சில பத்திகளாலும் முகச் சவரம் செய்யலியோ படிக்க முடியவில்லை.


நினைவோடைக் குறிப்புகள் என்றாலும் நினைவில் நிற்கிறது இந்த அப்புச்சி வழி.

           

             

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

மகா சிவராத்திரியும் சில தேநீர் கோப்பைகளும்- யாழி (கவிதை புத்தக வெளியீட்டு விழா)

          கடந்த ஞாயிறு(14/9/14) அன்று கோவை ஆர்த்ரா அரங்கில் நடைபெற்ற கவிஞர் யாழி அவர்களின் "மகா சிவராத்திரியும் சில தேநீர் கோப்பைகளும்" கவிதை புத்தக வெளியீட்டு விழா நிகழ்வுகளின் புகைப்படங்கள்.