வியாழன், 16 அக்டோபர், 2014

தேவதைகளின் வீடு - எம்.ஸ்டாலின் சரவணன்.

       
               எனக்கு விவரம்தெரியும் காலம்தொட்டே என் அப்பா 'குங்குமம்' இதழின் வாசகர்.அதனால் வாரம் தவறாமல் அதைப்  படித்துவிடும் வாய்ப்பு எனக்குக் கிட்டும்.அதில் வரும் வாசகர் கவிதைகள் எனக்குப் பிடிக்கும் என்பதால் அந்தப் பகுதிக்குத்  தனி கவனம் செலுத்துவேன்.அவ்வாறு தொடர் வாசிப்பில் இருந்த நாட்களில் சிலரின் கவிதைகளின்பால் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதுண்டு.அதில் என்னைக் கவர்ந்தவர்களில் ஸ்டாலின் சரவணனும் ஒருவர். முகநூலில் நண்பராக அவருடன் இணைந்த பின்பு இன்னும் நெருங்கி அவரின் படைப்புக்களை கவனிக்கும் வாய்ப்பைப்  பெற்றேன். எனது வேண்டுகோளுக்கு இணங்கி தனது முதல் கவிதைப் புத்தகமான ' தேவதைகளின் வீடு ' அனுப்பியிருந்தார்.உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவர் எனக்கு புத்தகம் அனுப்பி இரண்டு வாரங்களுக்கும் மேல் இருக்கும்.உடனே அதைப் படித்துவிட்டேன் என்றாலும், பதிவிட தாமதத்திற்கு முழுக் காரணமும் நான்தான்.இனி புத்தகத்திற்குள் செல்வோம்.
...................................................................................................................................................................

                                                     'தேவதைகளின் வீடு' 

                 கவிஞர்  கடவுளின் கவிதையை முதல் கவிதையாகத் துவங்கி இருக்கிறார்.கடவுள் வாழ்த்தோ என்று அய்யங் கொள்ளாதவாறு, சக மனிதனின் துயர் தீர்ப்பதில்  கடவுளைக் கண்ணுறலாம் என்று இயல்பாகக் கூறிக் கடக்கிறார்.

                   மணல்கடத்தலால் ஆறுகள் அழிந்து வருவதை இவ்வளவு எளிதாக இதுவரை நான் படித்ததில்லை.  
                   
                     'ஆறு' கொலை 
                     தடயம் சிக்கியது 
                     மணல்லாரி  தடம்  

                   கிராமத்து வாழ்க்கையில் நம்முடன் ஒன்றெனக் கலந்திருந்த சிட்டுக்குருவிகளை  அவ்வளவு எளிதில் நாம் மறந்துவிட முடியாது.இன்றைய நகரமயமாக்கலால் செல்போன் கோபுரங்களின் அலைவீச்சுக்களால் எளிதில் அவைகளைத் தொலைத்துவிட்டோம்.கவிஞர் அதை எளிமையாகவே நமக்கு உணர்த்துகிறார் இந்தக் கவிதையில்.. 

                    தொடர்பெல்லைக்கு 
                    அப்பால் 
                    சிட்டுக்குருவிகள். 


                     
                    


                 தலைப்புக் கவிதையாக வரும் 'தேவதைகளின் வீடு'   படிக்கையில், பெண் பிள்ளைகளைப் பெற்றவனை இந்தச் சமூகம் பரிதாபத்திற்கு உரியவனாகவே பார்க்கிறது என்பதைப் பதிந்து,  அந்தக் குழந்தைகளை தேவதைகள் என்று வர்ணித்து இந்தச் சமூகத்தின் முகத்தில் கரியைப் பூசிவிடுகிறார்.

                     ஒரு கவிஞனின் ஆரம்பம் என்பது அவன் தன் அம்மாவின் பாசத்தையும்,அன்பையும் உற்றுநோக்குகையில் உருவாகி விடுகிறான் என்பேன் நான். இங்கே தாயை தேவதையாக்கி அழகுபார்க்கிறார் கவிஞர்.

                       வெள்ளை உடையில்தான் 
                       தேவதை இருப்பாள் 
                       எவன் சொன்னது? 
                       அழுக்குடையில் 
                       அடுப்படியில் அம்மா.

                       ஒருமுறை நண்பர் 'நாணற்காடனுடன்' முகநூலில் பேசிக்கொண்டிருந்த பொழுது, நம்மைச் சுற்றியே கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன,உற்று நோக்கினால் நம் கால்களுக்கடியிலும் கிடக்கும் ஓராயிரம் கவிதைகள் என்று அவர் கூறியதை மெய்ப்பித்துள்ளார் நண்பர் ஸ்டாலின்.
                        ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் ஒடுங்கிவிடாது,தன் கற்பனைகளை பல்வேறு   தளத்திலும் பரப்பி அனைத்தையும் கவிதையாகப் பதிவு செய்துள்ளார். 

                          புத்தகத்தில் உள்ள அனைத்து கவிதைகளைப் பற்றியும் எழுதிவிட ஆசைதான், இனி வாசிக்கப்போகும் மற்றவர்களின் வாசிப்பு சுவாரஸ்யத்தை கெடுக்க விரும்பாததால் அம்முயற்சியைக் கைவிடுகிறேன்.

                           இவர்போன்ற இயல்பான கவிஞர்களைக் காலம் நமக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.அந்த வரிசையில் உள்ள நண்பர் ஸ்டாலின் அவர்களைக் கொண்டாடுவதில் எனக்கு மகிழ்ச்சியே.மேன்மேலும் அவர் தன் சிறந்த படைப்புக்களை புத்தகங்களாக வெளியிட எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
                         
                     


2 கருத்துகள்: