திங்கள், 6 அக்டோபர், 2014

சிந்தைக்குள் ஒட்டிய பாடல்...

        சனிக்கிழமை மாலை வீடு திரும்பும் நேரம்போல இருப்பதில்லை இந்த திங்கட்கிழமை காலை.மாணவனாய் இருந்த காலந்தொட்டு, பணியாளனாய்ப் பயணித்து, இன்று ஒரு சிறு தொழில் நிறுவன நடத்துனன் என்றபொழுதும், அடிவயிற்றில் புளிகரைக்காத திங்கள் காலைகள் இருந்ததில்லை ஏதேனும் ஒரு காரணங்களுக்கென. 

         இன்றும் அதே போலதான் துவங்கியது பயணம் பழைய பாடல் ஒன்றை மனதில் பாடியபடி.பாடல் உபயம் சூரியன் எப்.எம், உபயதாரர் சாட்சாத் என் அப்பாதான். இந்த இடத்தில் அப்பாவைப் பற்றிச்  சிறு குறிப்பை வரைந்துவிட்டால் இந்தப் பயணக்குறிப்பைத்  தொடர சுவாரஸ்யமாக இருக்கும்.

         என் அப்பா நடிகர் கார்த்திக் ரசிகர் என்றாலும், பள்ளிப் பருவத்தில் சூப்பர் ஸ்டாரின் ரசிகனான என் வேண்டுகோளுக்கு இசைந்து 'தளபதி' படத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். அப்பொழுது கார்த்திக்கின் 'அமரன்' படமும் ரிலீசாகி இருந்தது.அந்தப் படத்தில் கார்த்திக் தன் முடியைப் படிய வாரி கறுப்புக் கண்ணாடி அணிந்து வருவார்.அதே கெட்டப்பில் சிறு கூச்சமும் இன்றி தளபதி படத்திற்கு என்னை அழைத்துச் சென்று கடுப்படித்தவர்தான் என் அப்பா. அடுத்தவர் விமர்சனங்களை சட்டை செய்யாதவர். மத்தவங்க உங்களப்பத்தி என்னப்பா நினைப்பாங்க என்றால், அவனுகளுக்கு என்ன  HAIRA தெரியும்? என்ற கேள்வியோடு எளிதில் கடந்துவிடுவார். அடுத்தவர்களின் எண்ணங்களைப் பத்திக் கவலைப்படாமல் தினமும் காலை ஏழு மணிதுவங்கி, போதும் என்று தனக்குத் தோன்றும்வரை ஓயாமல் சூரியன் எப்.எம் மை ஒலிக்கவிட்டு அலறவைப்பார் அக்கம்பக்கத்தினரை.இன்று காலை அதே சூரியன் எப்.எம் மில் ஒலிபரப்பாகிய  'அவன்தான் மனிதன்' படப் பாடல் எரிச்சலான என் மனநிலையைத் தாண்டி சிந்தையில் போய் அமர்ந்துகொண்டது.

           வீட்டிலிருந்து கிளம்பி மெயின் ரோட்டுக்குச்  சென்றிருப்பேன், ரோட்டின் இடது புறமாக ஒரு சிறுவன் தன் இடக்கையின்  கட்டை விரலைமட்டும் உயர்த்தி மற்ற விரல்களை உள்மடக்கி தாகத்திற்கு தண்ணீர் கேட்பவன் போன்ற தோரணையில் காட்சியளித்து ணா.. லிப்ட் ணா.. என்றான். வெளிர்ந்த ரோஸ் கலர் சட்டையும், அடர்  சிவப்புக் கால்சட்டையும் அவனை அரசுப்பள்ளிச் சிறுவனாக அடையாளப்படுத்தியது. இன்று அவனது பள்ளிக்கு விடுமுறை என்பதை தினசரி செய்தித்தாளைப் படித்தோ ,அல்லது தொலைக்காட்சிச் செய்தி பார்த்தோ அவனிடம் அன்றைய தினத்தின் நடப்புகளைத் தெரிவிக்க அவன் வீட்டில் ஆளில்லை என்பதை அவனது முக இறுக்கம் காட்டிக் கொடுத்தது.நிற்க. 

             நீங்கள் நினைப்பதுபோல்  எல்லா நேரங்களிலும் லிப்ட் கேற்கும் அனைவரையும் ஏற்றிக்கொள்ளும் மனநிலை உடையவன் அல்ல நான்.வயதானவர்களுக்கு இரக்கப்படுவேன் என்றாலும் நான் சேரவேண்டிய இடம்தாண்டி அவர்கள் செல்ல  வேண்டியிருந்தால் முன்பே  அவர்களிடம் சொல்லிவிட்டு, சம்மதம் எனில் வண்டியில் ஏற்றிக்கொள்வேன். குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கோ, இளவயது ஆண்களுக்கோ கட்டாயம் நான் லிப்ட் தர மறுத்துவிடுவேன்.கை,கால் நல்லாத்தானே இருக்கு நடந்தா என்னவாம்? என்றோ, இளவயசுல என்னடா உங்களுக்கு சொகுசு? என்றோ மனதினுள் எண்ணியவாறே, வண்டி இல்லாத நாட்கள் துவங்கி இதுவரைக்கும் யாரிடமும் லிப்ட் கேட்டுப் பயணிக்காதவன்  என்ற மனநிலையில்  என் செயலுக்கு நானே நியாயம் கற்பித்துக் கடப்பேன். இந்த நிலையில் அந்தப் பள்ளிச் சிறுவனருகில்  வண்டியை நிறுத்தி விசாரித்தபொழுது நான் செல்ல வேண்டிய இடத்திற்கு வலதுபுறம்  அவன் செல்ல வேண்டியதை அறிந்து சாரி சொல்லிவிட்டு கிளம்பினேன்,என்னிடம் ஏதோ சொல்ல முயற்சித்த அவன் குரலை செவிமடுக்காதவாறு.

             சிந்தையில் அப்பனால் ஒட்டப்பட்ட பாடல் ஒலித்தவண்ணம் இருக்க ஒரு ஐம்பதடி தொலைவு சென்றிருப்பேன், இங்கே ஆட்கள் வேலை செய்கிறார்கள் மாற்றுப் பாதையில் செல்லவும் என்றது மஞ்சள்நிறப் பின்னணியிலான செந்நிற எழுத்துக்கள் தாங்கிய மாநகராட்சி இரும்புப் பலகை. உடனடிச் சலிப்புடன் வண்டியை வந்தவழி திருப்பி அச்சிறுவன் நின்ற இடத்துக்கு வந்தேன்.அவனைக் காணவில்லை.அவனிடம் சாரி சொல்லிவிட்டுக் கிளம்பியபோது ரோடு ப்ளாக் என்பதைத்தான் சொல்ல விழைந்தானோ என்று தோன்றியது.அடடா சே என்ன மனுசன்டா நீ? என்று என்னைத் திட்டியபடி விரைந்தபொழுது  அச்சிறுவன் அவன் வீடுநோக்கி  நடந்துகொண்டிருந்தான். அவனை மேலும் நடக்க விடக்கூடாது என்ற எண்ணத்தில் அவனை அலேக்காய் வண்டியில் அமரவைத்து சிறிது நேரத்திலேயே அவனை வீட்டில் இறக்கி விட்டேன். ணா நான் அந்த ரோடு ப்ளாக் னு சொல்ல வந்தன்னா நீங்கதா காது கேட்காம போயிட்டிங்க என்றவனிடம் சாரி தம்பி கவனிக்கல என்றேன்.

               எங்களிருவரின் உரையாடலுக்கிடையில் நடுத்தர வயதுகொண்ட ஒரு அம்மா கையில் கட்டைப்பையுடன் எங்கோ பயணிக்கத்  தயாராய் நின்றபடி அச்சிறுவனிடம் என்னைப் பற்றியும் நான் செல்லும் இடம் பற்றியும்  கேட்டறிந்ததும் அவர் முகம் பிரகாசமானது.அது அச்சிறுவனின் பாட்டியாம். தம்பி தம்பி நீங்க போற இடத்துக்குக் கொஞ்சம் தள்ளித்தான்   நாம்போற இடமிருக்கு  என்னைய அங்க இறக்கிவிட்டுடுங்க தம்பி என்றவரை மறுப்பேதும் சொல்லாதவாறு வண்டியில் ஏற்றிக்கொண்டு கிளம்பினேன். காலையில் சிந்தைக்குள் ஒட்டிக்கொண்ட பாடல் இப்பொழுது  மறுபடியும் மனதில் ஒலிக்கத் துவங்கியது.வண்டி நாற்பது கிலோமீட்டர் வேகம் தொட்டு ஓடிக்கொண்டு இருந்தபொழுது, எரிபொருள் குறைந்து வருவதை ஏதேச்சையாகக்  கண்டேன். மனதில் எழுந்த பீதியை வெளிக்காட்டாது, அந்தம்மா சென்று சேரும் இடம்வரை சென்றுவிட்டால் போதும் என்ற மனநிலையில் வண்டியைச் செலுத்தினேன்.அவர் இறங்கும் இடம் வந்ததும் அவரை இறக்கிவிட்டு அவரின் நன்றிகளை மனதில் நிரப்பிவிட்டு,வண்டியை முடுக்கினேன். வண்டி நகரவில்லை.எரிபொருளின் இருப்பைக் காட்டும் முள் செத்துக்கிடந்தது சிவப்புக்கோட்டைத் தாண்டி.பாக்கெட்டில் பத்துப் பைசா கிடையாது என்ற நிலையிலும் சிந்தையில் ஒட்டிக்கொண்ட அந்தப் பாடலான அவன்தான் மனிதன் படத்திலிருந்து 
"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா"

என்ற பாடல் 

அதிலும் குறிப்பாக 

"நானிருக்கும் நிலையில் உன்னை  என்ன கேட்பேன் , 
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்." 

என்ற வரிகளை இப்பொழுது வாய்விட்டுப் பாடத் துவங்கினேன்  வண்டியை சென்டர் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியபடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக