திங்கள், 15 செப்டம்பர், 2014

அறை எண் 57 ல் கடவுள் ( அலமேலு லாட்ஜ் )

         
         அது ஒரு இயல்பான சனிக்கிழமை ( 13/9/14) போல அல்லாது, எனக்கு தண்ணி காட்டும்  நிகழ்வாகவே பட்டது.ஆம் அன்றெனக்கு விடுமுறை.நான் வீட்டில் இருக்கிறேன் என்பதையறிந்தே குடிநீர்க் குழாயில் தண்ணீர் திறந்து விட்டிருப்பார்கள் போலும் TWAD காரன்.என் மனைவிக்கு அன்று  அலுவலகம் செல்லவேண்டி இருந்ததால் தண்ணீர்  பிடிக்கும் வேலை என் தலையில் விழுந்தது.ஒவ்வொரு முறையும் நான் வீட்டில் இருக்கும்பொழுதே தண்ணீர் திறந்துவிடுவதன் சூழ்ச்சியை  அறியும் முயற்சி இன்னும்  தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


           அந்த இறுதிக் குடத்தைச்  சுமந்து வந்த வேளைதான் என் அலைபேசி ஒலித்தது.குடத்தை  வைத்துவிட்டு வருவதற்குள் அமிழ்ந்துபோனது அலைபேசியின் ஒலி. சரி எப்பவும் போல டேட்டா கார்டுக்கு பணம் கட்ட ரிலையன்ஸ்ல் இருந்துதான் அழைத்திருப்பர் என்று அலைபேசியைக் கையில் எடுத்ததும் ஒரு இன்ப அதிர்ச்சி.நந்தன் அண்ணாதான் அழைத்திருந்தார்.அவரின் அழைப்பை நான் ஏற்காததால்,அவரின் ஏமாற்றம் என் அலைபேசியில் மிஸ்டு காலாகப் பதிவாகி இருந்தது.உடனடியாக அவரைத்  தொடர்பு கொண்டதும், மகி நாளைக்கு காலைல நானும் நீயும் இளமணி அண்ணா வீட்டுக்கு போய் சாப்பிட்டு விட்டு நேரா யாழி அவர்களின் கவிதை புத்தக வெளியீட்டு விழா நடக்கும் அரங்குக்குச்  சென்றுவிடலாம், இன்று மாலையில் நான் கிளம்பும் பொழுது நாளைக் காலையில் கோவை வந்து தங்கும் விடுதியின் பெயரைச் சொல்கிறேன் என்றுவிட்டு வைத்துவிட்டார்.எனக்கு இன்ப அதிர்ச்சிதான் இதற்குமுன்பு வரை ஓரிருமுறைதான் அவர் என்னோடு அலைபேசியில் பேசி இருந்தார்.

            அடுத்த நாள் ஞாயிறு காலை 7.30 மணி வரை அவரிடம் இருந்து அழைப்பு வராததால் நானே தொடர்பு கொண்டேன்.அவர் வந்த பேருந்து, போக்குவரத்து நெரிசலால் ஒன்னரை மணி நேரத் தாமதம் என்றும்,இப்பொழுதுதான் பெருந்துறையைத் தாண்டி இருப்பதாகக்  கூறியபொழுது, எப்படியும் அவர் கோவை வந்துசேர 9.00 மணி ஆகிவிடும் என்பதை நானே யூகித்துக் கொண்டேன்.சரியாக 9.15 மணியளவில் என்னை அழைத்து தான் விடுதி அறைக்கு வந்துவிட்டதாகவும், நீ வருவதற்குள் குளித்துத்  தயாராகி விடுகிறேன் என்றார்.நானும் அண்ணன் seema senthil அவர்களும், நந்தன் அண்ணா தங்கியிருந்த அறைக்கு 9.35 மணிக்குச் சென்று அறை எண்  57 ஐத் தட்டியதும் முகதரிசனம் தந்து, தான் உடை மாற்றிக்கொள்ள ஐந்து நிமிட அவகாசம் கேட்டது எங்கள் இருவரிடமும், இதுகாறும் நான் புகைப்படங்களில் பார்த்தும்,செவி வழி குரலைக் கேட்டிருந்த அந்தக் கடவுள். எங்கள் இருவருக்கும் சேர்த்து ஐந்து நிமிடம் என்று சொன்னபோதும்,ஐந்தை இரண்டால் வகுத்து  ஈவு 2  மீதி  1 என்ற கணக்கில் நான்கு நிமிடத்தில் கிளம்பி வந்துவிட்டார்.இளமணி அண்ணாவிடம் அவரின் வீட்டுக்கு வழி கேட்டுவிட்டு வண்டியைக் கிளப்பியது முதல் வீடு சென்று சேர்வதற்குள் இடைப்பட்ட தொலைவிற்குள் இருவருக்குமான நெருக்கத்தை வளர்த்துவிட்டிருந்தார் தன் அரவணைப்பான பேச்சினால்.

               இளமணி அண்ணா வீடு வந்ததும் சிறிய உரையாடலுக்குப் பின் அனைவரும் உணவருந்தத் துவங்கினோம்.வசீகரப் புன்னகையோடு பரிமாறிய அம்மாவின் கைப் பக்குவத்திற்கும்,ருசிக்கும் அனைவரும்  கட்டுண்டுபோனோம் என்று சொல்வது இங்கு சாலச்சிறந்தது.ஒரு சில வேலைகளைச் சிறப்பாகச் செய்யும் கைதேர்ந்தவர்களை ,அந்த வேலை அவர்களுக்குக் கைவந்த கலை என்று சொல்லுவோம்.இளமணி அண்ணாவுக்கும்,அம்மாவுக்கும் வீடு தேடி வருபவர்களை உபசரிப்பதுதான் அவர்களுக்கு  கைவந்த கலை என்பதை நான் உணர்ந்த தருணம் அது. இளமணி அண்ணாவுக்கும்,அம்மாவுக்கும் என் அன்பை உரித்தாக்கிக் கொள்கிறேன்.நேரமின்மை காரணமாய் உடனே அரங்கிற்கு கிளம்பினோம்.எங்கள் மூவரோடு இளமணி அண்ணாவும் பயணப்பட்டார்.


                 அரங்கிற்குள் நுழையும் முன்னமே விழா  துவங்கி இருந்தது.  வாழ்த்துரை வழங்கவேண்டிய வரிசையில் நந்தன் அண்ணாவும்  இருந்தார்.அதிகப் பணிச்சுமை காரணமாய் கவிதை புத்தகத்தைப் படிக்க முடியவில்லை.ஆதலால் அரங்கிற்கு வெளியே உள்ள படியில் அமர்ந்து புத்தகத்தில் இருந்த கவிதைகளில்  சில குறிப்புகளை எடுத்துக் கொண்டு தன் முறை வந்ததும் வாழ்த்தி முடித்தார்.            விழா முடிந்ததும், கதை உரையாடல்   நிமித்தமாய் திருச்சி செல்லவேண்டும் என்று என்னிடம் முதலே கூறியிருந்தார்.அதற்கேற்ப அவரின் சிஷ்யர் ஒருவரின் வீட்டுக்கு மதியம்  சென்றுவிட்டு சரியாக மாலை  5 மணியளவில் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் அலைபேசியில் என்னை அழைத்து, தான் கிளம்பிவிட்டதாகக் கூறினார்.சுமார் 5 மணிநேரம் நான் அவரோடு இருந்திருப்பேன்.அவர் கிளம்புகிறேன் என்றதும் நெடுநாளைய நண்பரொருவரைப் பிரிந்ததைப் போல ஒரு சுணக்கம் மனதில் தோன்றியது.அதற்குக்  காரணம் அவரின் எதார்த்தமான பேச்சு.

                இன்று காலை திருச்சியில் வேலை முடிந்ததும்  சென்னைக்குப் புறப்பட்டு மாலை வீடு சென்றடைந்ததும் என்னைத் தொடர்பு கொண்டு தான் சென்னை வந்து சேர்ந்ததாகக் கூறினார்.மற்ற அனைவரைப் பற்றியும் விசாரித்து விட்டு, அண்ணன் seema senthil  அவர்களின் எண்ணைத் தனக்குக் குறுஞ்செய்தியில் அனுப்பிவிடுமாறு கூறிவிட்டு மீண்டும் நல்லதொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம் என்று கூறி விடைபெற்றார்.இதோ இன்றைய நாள் முழுவதும் நேற்று அவர் என்னுடன் பேசிய பேச்சுக்கள் என்னைச் சுற்றிக்கொண்டே இருந்தன.ஒரே நாளில் அனைத்தையும் பகிர்ந்துகொள்ளமுடியாது என்ற எதார்த்தத்தைப் புரிந்தவன் என்பதால் மீண்டும் அவரைச் சந்திக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக